×

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்தக்கட்ட போருக்கு தயாராகும் இஸ்ரேல்


டெலி அவிவ்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்தக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் கடந்த 7ம் தேதி 5 ஆயிரம் ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக ஊடுருவிய சுமார் 1,000 ஹமாஸ் படையினர், அங்கிருந்த 1,400க்கும் மேற்பட்ட பொதுமக்களையும், ராணுவத்தினரையும் படுகொலை செய்தனர். இதுதவிர இஸ்ரேல் ராணுவத்தினர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் படையினர் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக அந்த பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 18 நாட்களாக காசா முழுவதும் தீவிர வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேர் உயிரிழந்ததாக அந்த பகுதி சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் தொடங்கிய கடந்த 18 நாட்களில் காசாவில் இதுவரை 2,360 சிறுவர்கள் உள்பட 5,791 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் ஹமாஸூடனான போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் அந்த நாட்டுக்கு நேற்று வந்தார். அங்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேல் அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் இருவரும் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது அதிபர் இம்மானுவல் மேக்ரான் கூறுகையில், ‘இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி. இதில் இஸ்ரேல் தனியாக இல்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் ஹமாசுக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலகளவில் ஒன்றிணைந்தது போல, ஹமாசுக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும். பாலஸ்தீன பிரச்னைக்கு அரசியல் ரீதியில் இஸ்ரேல் தீர்வு கண்டால் மட்டுமே மத்திய கிழக்கு பகுதியில் அமைதி, நிலைத்தன்மை ஏற்படும்’ என்றார். இந்நிலையில், இந்த போர் இன்று 19வது நாளை எட்டியுள்ளது. நேற்று பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 400 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

இதனிடையே ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு பகுதி எல்லையை குறிவைத்து தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்த எல்லை பகுதிகளிலும் சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் நேற்று கூறுகையில், பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறோம். எங்களை பொறுத்தவரை ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க வேண்டும். காசா பகுதி ஆட்சி நிர்வாகத்தில் இருந்து அவர்களை முழுமையாக நீக்க வேண்டும். அடுத்த கட்ட போருக்கு தயாராகி வருகிறோம். இதன்படி காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம்’ என்றார்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு பிறப்பித்த உத்தரவில், மனிதாபிமான உதவி அடிப்படையில் காசாவுக்கு உதவிபுரிய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி தூதர் ரவீந்திரா கூறுகையில், மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு 38 டன் பொருட்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்களை அனுப்பியுள்ள டெல்லி முயச்சிகளை கோடிட்டு காட்டினார்.

போர் பரவும் சூழல்: ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை
இஸ்ரேல்- காசா போர் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ‘இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இது நாளுக்கு நாள் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. சர்வதேச மனித உரிமை சட்டம் இந்த போரில் மீறப்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. சர்வதேச சமூகம் இதற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும். 10 லட்சத்துக்கும் அதிகமானோரை தெற்கு காசாவுக்கு பாதுகாப்பாக இடம் பெயர கூறிவிட்டு, அங்கேயும் இஸ்ரேல் குண்டுகளை வீசுகிறது. கடந்த 56 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு, வன்முறை, பொருளாதார நெருக்கடி, வீடுகளை இடிப்பு என பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கவில்லை. ஹமாஸின் திடீர் தாக்குதல் பயங்கரமானதாகும். அதற்காக பாலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது. பாதுகாப்பான இஸ்ரேலும், ஐ.நா. தீா்மானங்கள் மற்றும் முந்தைய ஒப்பந்தங்களின்படி சுதந்திரமான நாட்டை பாலஸ்தீனர்களும் காண வேண்டும்’ என்றார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ‘பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு மும்பையில் மக்கள் மீது நடத்திய தாக்குதலும், இஸ்ரேலியர்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலும் சட்ட விரோதமானதுதான். இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி, ஆயுதங்கள் கிடைப்பதை உறுப்பு நாடுகள் தடுக்க வேண்டும்’ என்றார். இந்நிலையில், ‘காரணம் இல்லாமல் ஹமாஸ் படையினர், இஸ்ரேலை தாக்கவில்லை என்று கூறிய குட்டெரெஸ் பதவி விலக வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் குட்டெரெஸுடனான சந்திப்பை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இலய் கோஹன் ரத்து செய்வதோடு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

The post ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்தக்கட்ட போருக்கு தயாராகும் இஸ்ரேல் appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Tel Aviv ,Gaza ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...